

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 பேர் மட்டுமே பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு ஏற்ற வகையில் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் வருகையை முன்னிட்டு அவருடைய கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் குவிவார்கள் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து த.வெ.க. வினர் தரப்பில் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதோடு, கூட்டம் நடைபெறும் பகுதியில் 140 அடி அகலம் மற்றும் 600 அடி நீளம் என மொத்தம் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில், 36 அடி உயரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 4 ஆயிரத்து 900 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. அதோடு, நிழற்பந்தலின் கீழ்பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் நிறுத்தப்படும். அந்த வாகனத்தின் மீதிருந்துதான் விஜய் பேசவுள்ளார். மேலும், பாதுகாப்பு காரணத்திற்காக விஜய் பேசும் இடத்திற்கும் நிர்வாகிகள் அமரும் இடத்திற்கும் இடையே 60 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது.
அதோடு, கூட்டம் நடைபெறும் பகுதியில் விஜயை காண அதிகளவில் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் குவிவார்கள் என்பதால், மைதானத்திற்குள் யாரும் அனுமதியின்றி செல்லாத வகையில் தலா 30 அடி தொலைவில் 3 இடங்களில், 10 அடி உயரம் கொண்ட தகர சீட்டுகளால் மூன்றடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதற்கிடையே, கூட்டம் நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். விஜய்யின் பிரசார பேருந்தும் இன்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டது.