அரசியலில் அரிதான நிகழ்வு: அன்று.. ஜெயலலிதா; இன்று.. விஜய்

1991 சட்டமன்றத் தேர்தலில் காங்கேயன், பர்கூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் ஜெயலலிதா.
அரசியலில் அரிதான நிகழ்வு: அன்று.. ஜெயலலிதா;  இன்று.. விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங் கீட்டை நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வின் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

இதற்கிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. 234 தொகுதிகளி லும் த.வெ.க. தனித்து களம் காண்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை விஜய் அறி முகம் செய்து வைத்தார்.

இந்தநிலையில், குறிப்பிடத்தக்க விஷயமாக அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்திய அளவில் இத்தகைய போக்கு அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடும் சூழல் குறைவாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலில் தான், தவெக தலைவர் விஜய் இம்முறை இரு தொகுதிகள் போட்டியிட உள்ளார்.

மக்கள் பிரநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33(7), ஒரு வேட்பாளர் இரண்டு இடங்கள் வரை போட்டியிட வழிவகை செய்கிறது. எனினும், 1996-ம் ஆண்டுக்கு முன், இந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், தேசிய அளவில் நரேந்திர மோடி, ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஒரே தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் முன்னனி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, பிரதமர் மோடியும் 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 1991 சட்டசபை தேர்தலில், பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அதேபோலவே, 2001 தேர்தலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறி ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் மீது பல வழக்குகளில் தண்டனைப் பெற்றிருந்த நிலையில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும், 4 வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்பிறகு, 2006 தேர்தலில் தேமுதிக தலைவராக இருந்த விஜயகாந்த் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடைசி நேரத்தில் விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார். இவ்வாறு, பல ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இல்லாத இந்த சூழலில் தான், விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் நீண்டகாலத்திற்குப் பிறகு, ஒரு வேட்பாளர் இருதொகுதிகளில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவரான விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். அவர் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வாரா? என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com