ரேஷன் அரிசியை கூட பாதுகாக்க முடியாத ஆட்சி.. - ஒட்டன்சத்திரத்தில் அண்ணாமலை பிரசாரம்

2023-ல் மட்டும் ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்பட்ட 900 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக அண்ணாமலை கூறினார்.
ரேஷன் அரிசியை கூட பாதுகாக்க முடியாத ஆட்சி.. - ஒட்டன்சத்திரத்தில் அண்ணாமலை பிரசாரம்
Published on

திண்டுக்கல்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;-

தமிழகத்தை தீயசக்தி திமுகவிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும், மக்கள் விரும்பும் நல்லாட்சி வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு செயலாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடியல் சேகரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணி இருந்தும், விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையில் வாடி வருகிறார்கள். தங்கள் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பின் முறைகேட்டை எதிர்த்து புகாரளித்த குப்புசாமிக்கும், அவரது குடும்பத்திற்கும் திமுகவினர் கொடுத்த தொல்லையால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரத்தை தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்திற்காக மாதம்தோறும் சுமார் 2 லட்சம் டன் அரிசியை மத்திய பாஜக அரசு வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்பட்ட 900 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தெரிந்தே இவ்வளவு கடத்தல் நடக்கிறது என்றால், தமிழகத்தில் உள்ள நிலையை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஊழல் முறைகேடு செய்து ஏழை மக்களுக்கு கொடுக்கவேண்டிய அரிசியை கூட பாதுகாக்க முடியாத கையாலாகாத ஆட்சி விரட்டியடிக்கப்பட வேண்டும்.

எனவே, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு மாற்றம் கிடைக்கவும், விவசாயிகள் நலன் காக்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடியல் சேகரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தாமரை மலரட்டும்! தமிழகம் வளர்ச்சி பெறட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com