

சென்னை,
நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக, மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.வும் இணைந்துள்ளன. திமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை என்றாலும், ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் ஒவ்வொரு கட்சியுடனுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
எனவே, இன்றைய அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையின்போது, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்து வாங்கப்படும் என்று தெரிகிறது. திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது.
நாளை மதிமுகவுடன் பேச்சுவார்த்தை:-
மதிமுகவுடன் நாளை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக, கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைபோல மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை தொகுதிப்பங்கீடு பேச்சு நடத்துகிறது திமுக.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு:-
வருகிற 26-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்க மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், எஸ்.கண்ணன் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
27-ம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அவர்களும் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளையே குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காங்கிரஸ், தேமுதிக, விசிக, உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள தேதியை திமுக இன்னும் வெளியிடவில்லை.
திமுக கூட்டணி கட்சிகள் இரட்டை இலக்கத்தை குறிவைத்துள்ளதால் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்தே எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
இந்த முறை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28, தே.மு.தி.க.வுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6, ம.தி.மு.க.வுக்கு 6, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வத்திற்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மீதமுள்ள 167 தொகுதிகளில் தி.மு.க. களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.