தமிழக சட்டசபை தேர்தல் தள்ளிப்போகிறதா? சென்னை வரும் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் தள்ளிப்போகிறதா? சென்னை வரும் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடைசி கட்டத்தில் தமிழக தேர்தல்?

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதிதான் நடந்தது. கொரோனா காலம் என்பதால், அப்போது முன்கூட்டியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தலை நடத்தலாமா? என்று தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது. ஏற்கனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.

மே மாதமே நடந்த தேர்தல்கள்

தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வந்தாலும், ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே தேர்தல் நடந்துள்ளது. அதன்பிறகு பெரும்பாலும் மே மாதமே சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு, 2001 (மே 10), 2006 (மே 8), 2016 (மே 16) ஆகிய ஆண்டுகளில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. 2011 (ஏப்ரல் 13), 2021 (ஏப்ரல் 6) ஆண்டுகளில்தான் ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை

அந்த வகையில், இந்த ஆண்டும் தமிழகத்தில் மே மாதமே சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் மாதம் மத்தியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்பட 15 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று இரவு சென்னை வருகின்றனர். நாளை முதல் 28-ந் தேதி வரை தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

சட்டசபை தேர்தல் தேதி

அந்த வகையில், இந்திய தேர்தல் அதிகாரிகள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள், கமிஷனர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோருடனும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, தமிழக சட்டசபை தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com