

சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், தி.மு.க. 173, காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் புதிதாக இணைந்துள்ளது. எனவே, கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டணி கட்சிகளுக்கு அதே தொகுதிகளை ஒதுக்கவும், மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. களம் இறங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் தி.மு.க .கூட்டணியில் வரும் 22-ந் தேதி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு விண்ணப்பம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொது தேர்த லில் தி.மு.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மார்ச் 2-ந்தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது தொகுதிக்கு ரூ.25 ஆயிரமும், மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை பகிர்ந்து அளிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தற்போது விருப்ப மனுக்களை பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்பட உள்ளது.
இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்கள் செலுத்திய கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் விருப்ப மனு அறிவிப்பால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எனவே நாளை முதல் அண்ணா அறிவாலயம் தி.மு.க. வினர் கூட்டத்தால் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிவடைந்த பின்னர், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் நேர்காணலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.