

சென்னை,
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில், தி.மு.க. 173. காங்கிரஸ் 25, ம.தி.மு.க. 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 6, இந்திய கம்யூனிஸ்டு 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதி தமிழர் பேரவை 1 என 234 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்றுள்ள கட்சிகள் தொடர்வதுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க-வும் புதிதாக இணைந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், அதாவது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் 41 தொகுதிகள் உள்பட ஆட்சியிலும் பங்கு கோரி வருகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில்தான் தி.மு.க கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட இருக்கிறது.
இந்த சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு இன்று அமைத்தது. இதன்படி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவை ம.தி.மு.க. அறிவித்துள்ளது.
நடைபெற இருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.
1. ஆடிட்டர் அர்ஜுனராஜ் - கழக அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் - கழகப் பொருளாளர்
3. சு.ஜீவன் - உயர்நிலைக் குழு உறுப்பினர்
4. வி.சேஷன் - தேர்தல் பணிச் செயலாளர்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள குழுவினர் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.