சட்டசபை கூட்டம்: தமிழகம் போல் கேரளாவிலும் பிரச்சினை

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர் ஆகியோர் இன்று உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வருகை தந்தனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது போல், அண்டை மாநிலமான கேரளாவிலும் சட்டசபை முதல் கூட்டம் நடைபெற்றது. இங்கே கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதுபோல், கேரளாவிலும் ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இரு மாநில கவர்னர்களும் இன்று உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு வருகை தந்தனர். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, தனது உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அதேபோல், கேரள ஆளுநர் ராஜேந்திர அட்லேக்கரும் தனது உரையில் மத்திய அரசுக்கு எதிரான பகுதியை வாசிக்க மறுத்தார். அவர் புறக்கணித்த பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் வாசித்தார். மொத்தத்தில், தமிழகம், கேரளா ஆகிய 2 மாநில சட்டசபைகளும் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.






