

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சரும். தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருவாரூர் தெற்கு ரதவீதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் வேட்பாளர் முபாரக் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருவாரூர் என்றாலே அது திமுகவின் ஊர்; தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணில் இருந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன். உங்கள் வீட்டு பிள்ளை; இந்த மண்ணின் மைந்தன் நான். நேற்று முன்தினம்தான் திருவாரூர் ஆழித்தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்தது. உலகப் பெருமை கொண்ட அந்த ஆழித்தேரை ஓட வைத்த தலைவர் நம் கலைஞர்.
திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி நீதிமன்றம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி என அனைத்து வசதிகளையும் செய்தது கலைஞர். தேர்தலின் சூப்பர் ஸ்டாராக திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. 2021ல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினீர்கள். முதல் நாளிலேயே விடியல் பயணம் என்ற திட்டத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தேன்.
காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழையின் சுருக்குப் பையில் காசு உருவ நினைத்த பாஜக, உரிமைத் தொகையை முடக்க திட்டமிட்டது திமுக அரசு விழித்துக் கொண்டு பிப்ரவரியிலேயே மகளிர் உரிமைத் தொகை, கோடைகால நிதி ரூ.5,000 தந்தது மக்களின் மனது நிறைய வேண்டும்; அதுதான் எனக்கு முக்கியம்.
மகளிர் உரிமைத் தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் ஆகிய திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பி அடித்துவிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நாம் காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். வரியை உயர்த்தி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்; அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த பல்வேறு தந்திகளை பரப்பினார்கள். கலவர வெறியோடு| பிரிந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. அவதூறு பரப்பியதால், தற்போது அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் எதிர்க்கட்சியினர். தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டைக் காக்க, திமுகவின் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
"தலைவர் கலைஞர் மறைந்த பிறகு, திருவாரூர் மக்கள், பூண்டி கலைவாணன் அவர்களை தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெற வைத்தீர்கள். அந்த வெற்றி இந்த முறையும் தொடர வேண்டும். திருவாரூர் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்.
மன்னையில் பிறந்து சென்னையின் கோட்டையில் இருந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் களம் இறங்குகிறார். உதயசூரியன் சின்னத்தில் மன்னார்குடி மக்கள் வாக்களித்து அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் கொள்கைக் கூட்டணியின் பலமாக இருக்கக்கூடிய பொதுவுடைமை இயக்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) போராளி மாரிமுத்து களம் காண்கிறார். அவர் களத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் சிறப்பாக செயல்படுபவர். அப்படிப்பட்ட தோழர் மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து பெரும் வெற்றியை மக்கள் வழங்க வேண்டும்.
கூட்டணி கட்சியாக இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் முகமது முபாரக். நம்மில் ஒருவரான அவரை, வெற்றிபெற வைக்க வேண்டியது திமுகவினரின் கடமை. நன்னிலம் தொகுதியில் நிற்கும் அவரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.