மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடல் மைதானத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், திடீரென கூட்டத்தை மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்ற பாஜக முடிவு செய்தது. இதன்படி, சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ள மதுராந்தகத்தில் பாஜக கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் ஏற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






