வாபஸ் பெற மறுத்த வேட்பாளர்கள்: புதுச்சேரியில் 6 தொகுதிகளில் தி.மு.க. - காங்கிரஸ் நேரடியாக போட்டி

30 தொகுதிகளிலும் இரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வாபஸ் பெற மறுத்த வேட்பாளர்கள்: புதுச்சேரியில் 6 தொகுதிகளில் தி.மு.க. - காங்கிரஸ் நேரடியாக போட்டி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2 மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இதற்கிடையில் ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்ததால், 30 தொகுதிகளிலும் இரு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. இதன்படி காங்கிரஸ் 16, தி.மு.க. -13, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 6 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளவில்லை. தி.மு.க. தரப்பிலும் இந்த தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேட்பாளர்கள் முன்வரவில்லை.

இதனால், தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட 6 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரி அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது ‘நட்பு ரீதியான போட்டி’ என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘கை’ சின்னத்தை மக்கள் மறக்க கூடாது என்பதற்காகவும், தங்களின் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காகவும் காங்கிரஸ் கட்சியினர் இந்த முறையை பின்பற்றுவார்கள். இந்நிலையில், புதுச்சேரியிலும் இதே போன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com