பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்பே தொகுதிப் பங்கீடு - நயினார் நாகேந்திரன் பேட்டி

டாஸ்மாக் வியாபாரம் இல்லை என்று இந்த அரசாங்கம் கவலை படுகிறதே தவிர மக்களை பற்றி இந்த அரசாங்கம் கவலைப்படவில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்பே தொகுதிப் பங்கீடு - நயினார் நாகேந்திரன் பேட்டி
Published on

சென்னை,

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக பணிமனை திறப்பு விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 50 சதவீதமாகவும், சிறுவர்களுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60 சதவீதமாகவும் உயர்ந்து இருக்கிறது. யாராவது அதை எதிர் கொண்டு இருக்கிறார்களா இல்லை எழுதிக்கொண்டிருக்கிறார்களா அல்லது மீடியாவில் யாரும் காட்டுகிறார்களா என்றால் இல்லை.

தமிழகத்தின் கடன் பத்தரை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடனை பற்றி சட்டமன்றத்தில் பேசினால் நாங்கள் மட்டுமா வாங்குகிறோம் நீங்களும் தான் அகில இந்திய அளவில் வாங்குகிறீர்கள் என்று சொல்கிறார்களே தவிர தங்களது நிர்வாகத்திறமையை வெளிபடுத்த திமுக அரசாங்கம் ஒரு போதும் தயாராக இல்லை.

துணைமுதல்-அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கத்தான் இந்த திமுக அரசாங்கம் 5 ஆண்டு காலமாக முயற்சி செய்து வருகிறது. எல்லா மாவட்டங்களிலும், திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பணத்தை பதுக்கி வைத்துவிட்டனர். நாட்டை பற்றி கவலைப்படாமல் ஓட்டைப் பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காசு கொடுத்து ஓட்டை வாங்கிவிடலாம் என்று திமுகவினர் நினைத்துவிட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு தேர்தலின் சமயத்தில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களின் பைகளில் மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்களை எடுத்து செல்கின்றனர். டாஸ்மாக் வியாபாரம் இல்லை என்று இந்த அரசாங்கம் கவலை படுகிறதே தவிர மக்களை பற்றி இந்த அரசாங்கம் கவலைப்படவில்லை. பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்பே தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

முன்னதாக இந்த ஆட்சியை அகற்றிவிட்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயலாற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியில் மலரச் செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com