

சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண்கிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் அளிக்கப்படும் என்று விஜய் அதிரடியாக அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும்' என்று வெளிப்படையாக அறிவித்தார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது தி.மு.க.வின் கொள்கை முழக்கமாக இருந்து வருகிறது.
கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருந்து கிரிஷ் சோடங்கர் பின்வாங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.
தி.மு.க.வுடன் நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் இதை அவர் வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கிரிஷ் சோடங்கர் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காங்கிரசின் பலத்தை த.வெ.க. அங்கீகரிக்கிறது என்ற அதிரடி கருத்தையும் கூறினார்.
இதேபோல், திமுகவில் உள்ள 4 இடங்களில், திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 3 இடங்களை காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஆகியவை கேட்டு வருகின்றன. திமுகவிலும் பலர் கேட்பதால் திமுகவிலும் இழுபறி நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், திமுக உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் சூழலில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி பங்கேற்றுள்ளனர்.
மாநிலங்களவை இடம் தொடர்பாக காங்கிரஸ் இன்றைக்குள் முடிவை அறிவிக்க திமுக கெடு விதித்ததாக கூறப்படும் நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு 2 நாட்கள் இருப்பதால் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.