சி.வி.சண்முகம் மீது அதிருப்தி: அதிமுக நிர்வாகி விலகல்

விழுப்புரம் தொகுதியில் அறிவிக்க உள்ள வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று அதிமுக நிர்வாகி கோரிக்கை வைத்துள்ளார்.
சி.வி.சண்முகம் மீது அதிருப்தி: அதிமுக நிர்வாகி விலகல்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க. செயலாளர் பசுபதி, நேற்று மாலை கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களை திரட்டி திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் அவர், சி.வி.சண்முகத்திற்கு எதிராக அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் தொகுதியில் அறிவிக்க உள்ள வேட்பாளரை மாற்ற வேண்டும். நாங்கள் வார்டு செயலாளரில் இருந்து ஒவ்வொருவரும் கடந்த 5 ஆண்டுகளாக உண்மையாக உழைத்துள்ளோம். தான் தோல்வியடைந்த தொகுதியில் யாரும் வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில் சி.வி.சண்முகம் செயல்படுகிறார்.

கடந்த 2006 தேர்தலில் நான் பொன்முடியை எதிர்த்து போட்டியிட்டு 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றேன். சி.வி.சண்முகத்தால்தான் நான் தோற்றேன். சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைக்கிறார். விழுப்புரம் தொகுதியில் மாற்றுக்கட்சி வேட்பாளரை நிறுத்த மனமுள்ள சி.வி.சண்முகம், சொந்த கட்சியில் வெற்றி வாய்ப்புள்ளவருக்கு வழங்க மறுக்கிறார்.

சி.வி.சண்முகத்தை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண் டும். இதுபற்றி நாளை (அதாவது இன்று) எனது தலைமையில் 200 பேர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தலில் சீட்டு விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி, தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சி பொறுப்பையும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சி.வி. சண்முகம் என்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதால் மன உளைச்சலில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சி.வி.சண்முகத்தால் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாக பசுபதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com