தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது எப்படி..?

ஒரே நேரத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் தே.மு.தி.க. கூட்டணி பேசி வந்தது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது எப்படி..?
Published on

சென்னை,

"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்பது தேர்தலுக்கு தேர்தல் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவோ கருத்து மோதலில் ஈடுபட்டு இருப்பார்கள். ஆனால், தேர்தல் நேரத்தில் 'மறப்போம், மன்னிப்போம்' என்று கூறி கைகோர்த்து விடுவார்கள். சற்று தேர்தல் வரலாற்றை பின்நோக்கி சென்று பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி முடிவை அறிவிக்காமல் தே.மு.தி.க. காலம் தாழ்த்தி வந்தது. ஒரே நேரத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் கூட்டணி பேசி வந்தது. இரு கட்சிகளிடமும் '25 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும்' என்ற கோரிக்கையுடனேயே பேச்சு வார்த்தையை தொடங்கியது.

மதில் மேல் பூனை

ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே 'இரட்டை இலக்க தொகுதிகள் தரமுடியாது' என்று முதலிலேயே மறுத்துவிட்டன. தி.மு.க. தரப்பில் 6 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

ஆனாலும், யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல், மதில் மேல் பூனையாக அமர்ந்துகொண்டு, தே.மு.தி.க. மௌனம் காத்து வந்தது. முதலில் ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அடுத்து பிப்ரவரி 3-ந் தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிப்பதாக சொன்னார். ஆனால், குறிப்பிட்ட தேதிகளில் கூட்டணி முடிவை எதுவும் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவில்லை. மாறாக, 'உரிய நேரத்தில் கூட்டணி முடிவை அறிவிப்பேன். நமது கூட்டணி வெற்றி கூட்டணி' என்று கூறிவிட்டு சென்றார்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.

இதனால், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி நீடித்து வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், நேற்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதை உறுதி செய்தார்.

ஆனால், அதன் பிறகு பேட்டியளித்த அவர், ''தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசப்பட்டுவிட்டது. எத்தனை என்பதை தி.மு.க. தலைமை அறிவிக்கும்'' என்று கூறிவிட்டு சென்றார்.

தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்?

தி.மு.க. கூட்டணியில் வரும் 22-ந் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில், அப்போது தேமுதிகவுக்கான தொகுதிகள் எத்தனை என்பது தெரியவரும் என்றாலும், கூட்டணியில் இணையும் போதே அதை உறுதி செய்துவிட்டுதான் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள் என்பதால், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சொல்வதுபோல், பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது எப்படி? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 7 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், தேமுதிக தரப்பில் 10 தொகுதிகளாவது வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

கூட்டணியை உறுதி செய்தது யார்?

அதற்கு தி.மு.க. தலைமையோ, தே.மு.தி.க.வின் வாக்கு வங்கியை சுட்டிக்காட்டி, தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்தால், தங்களைவிட அதிகமாக வாக்கு சதவீதம் வைத்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

தி.மு.க. தரப்பில் அமைச்சர் எ.வ.வேலு, முதல்-அமைச்சரின் மருமகன் சபரீசன் ஆகியோர் தே.மு.தி.க.வுடனான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, கூட்டணிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

170 தொகுதிகளில் தி.மு.க. போட்டி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டுவரும் ஏனைய கட்சிகளுக்கு கூடுதலாக ஒரு தொகுதியை கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகுதிகளில் தி.மு.க.வே வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com