

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணி அமைத்திருந்தும் மேலும்.. மேலும்.. கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க உறுதியளித்து இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக, திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. அதில் இருந்து 7 தொகுதிகளை திமுக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைமையிடம் தேமுதிக கொடுத்த 20 தொகுதிகள் பட்டியலில், கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், தேமுதிக தலைமையும் வேட்பாளர்களை தயாராகவே வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தும், சிவகாசி, விருதுநகர், சாத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் ஒன்றில் விஜய பிரபாகரனும், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதியும், விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி எல்.வெங்கடேசனும், பல்லாவரத்தில் அனகை டி.முருகேசனும், பாப்பிரெட்டிப்பட்டியில் ஆர்.இளங்கோவனும், சேலம் தெற்கில் அழகாபுரம் மோகன்ராஜூம் களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு, அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதா விஜயகாந்தின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் தேர்வு செய்யப்படுவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.