

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளன. ஏப்ரல் 3-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்ற தகவலும் ஒரு பக்கம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி இருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. (அன்புமணி), அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க.வும் ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் எந்த கூட்டணியில் சேரலாம் என்ற யோசனையில் தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்), புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன. இந்த கட்சிகள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. இந்த பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்.
தே.மு.தி.க., பா.ம.க. (டாக்டர் ராமதாஸ்) ஆகிய கட்சிகளை தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள மறைமுக பேச்சுவார்த்தையை தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய கட்சிகள் தொடங்கியுள்ளன. டாக்டர் ராமதாசும், பிரேமலதாவும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காததால், இருபெரும் கட்சிகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணியை இறுதி செய்யாமல் இருக்கின்றன.
தேர்தல் அறிக்கை குழு, பிரசார குழுக்களை தி.மு.க., அ.தி.மு.க. அறிவித்தபோதிலும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. மேற்கண்ட அந்த கட்சிகள் எடுக்கும் முடிவை பொறுத்து கூட்டணியை இறுதி செய்ய தி.மு.க, அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. கூட்டணியை இறுதி செய்த பிறகே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க, அ.தி.மு.க. நடத்த உள்ளது. தி.மு.க.வில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி போய் இருக்கிறது.
அ.தி.மு.க.விலும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அனேகமாக அடுத்த வாரம் கூட்டணிகள் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை இருபெரும் கட்சிகளும் தொடங்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.