

ஈரோடு,
ஈரோடு ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி மாணவ, மாணவிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நான் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். வாய்ப்பு குறித்து கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். தி.மு.க.. காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, 2 கட்சிகளின் குழுக்கள் மூலம் நடந்து வருகிறது. இதுகுறித்து நாங்கள் கருத்து கூற இயலாது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி: தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி த.வெ.க.வுக்கு இருப்பதாகவும், விரைவில் கோட்டையில் விஜய் தேசிய கொடி ஏற்றுவார்' எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளாரே?
பதில்: சென்னை கோட்டையில் (தலைமை செயலகத்தில்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கொடியேற்றுவார். விஜய் வேண்டுமானால் அதன் அருகில் இடம் வாங்கி தேசிய கொடியை ஏற்றிக்கொள்ளலாம்.
கேள்வி: மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியுள்ளாரே?
பதில்: பிரதமர் மோடி தனது பதவிக்கேற்ற முறையில் பேசாமல் அரசியல் ஆதாயத்துக்காக தி.மு.க. மீது பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமருக்கு யாரோ தவறாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். அதன் உண்மை தன்மையை அவர் ஆராய வேண்டும். ஆதாரமில்லாமல் அவர் இப்படி பேசக்கூடாது. அவர் என்ன பேசினாலும் அவருடைய பதவியை கருதி தி.மு.க. என்றும் அவருக்கு மதிப்பு கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.