திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி: தவெகவுடன் கைகோர்க்க திட்டமா?

திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்ற கோஷம் புகைந்து கொண்டேதான் இருக்கிறது.
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி: தவெகவுடன் கைகோர்க்க திட்டமா?
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18-ல் வெற்றி பெற்றது.

இந்த முறை 41 தொகுதிகளையும், 2 ராஜ்ய சபா சீட்டையும் கேட்டுவருகிறது. ஆரம்பத்தில், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தையும் காங்கிரஸ் கட்சி கூடுதலாக முன்வைத்தது. ஆனால், திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கடைசி நேரத்தில் பின்னாங்கியது. என்றாலும், நீருபூத்த நெருப்பாக இன்னும் ஆட்சியில் பங்கு என்ற கோஷம் புகைந்து கொண்டேதான் இருக்கிறது.

சாதகமான பதில் இல்லை

சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தினார்.

ஆனால், அவரிடம் இருந்து சாதகமான பதில் வராததால், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அவர் டெல்லி திரும்பினார். அதையடுத்து தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யை சந்தித்து பேசினார். அப்போது, கே.சி.வேணுகோபால் வைத்த கோரிக்கையையே மீண்டும் வைத்தார்.

திமுக கைவிரிப்பு

ஆனால், கனிமொழி தரப்பிலோ, 27 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் தர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, குறைந்தது 35 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுக தரப்பிலோ, 'முடியாது' என கைவிரிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.

அதனால், திமுக கொடுப்பதை வாங்கிக்கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்குமா?, அல்லது கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பான தவெகவுடன் கைகோர்க்குமா? என்பது அடுத்தக்கட்ட நகர்வில்தான் தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com