

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து வழங்கவும் திட்டம் வகுத்துள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரை கடந்த (2021) சட்டசபை தேர்தலில் அங்கம் வகித்த கட்சிகளே இந்த முறையும் தொடர்கின்றன.
மேலும், மக்கள் நீதி மய்யம் கூடுதலாக இணைந்துள்ளது. இதனால், கடந்த முறை எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் வழங்கப்பட்டதோ, அதே இடங்களை மீண்டும் வழங்க திமுக முடிவு செய்திருந்தது. புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு 3 தொகுதிகள் வழங்கவும் திட்டம் வகுத்திருந்தது.
காங்கிரஸ் அதிருப்தி
ஆனால், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த முறை ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் கூடுதல் தொகுதிகளையும் கேட்டு அடம்பிடித்தது. கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தன.
இதனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக தொடர்ந்து அமைதி காத்தது. யாருடனும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கவில்லை. ஆனால், கடந்த 2 மாதத்திற்கு முன்பே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு குழு அமைத்து காத்திருந்த காங்கிரஸ் கட்சி தனது அதிருப்தியை வெளிக்காட்ட தொடங்கியது.
இறங்கி வந்த காங்கிரஸ்
இதுதொடர்பாக, டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய தலைமையிடம் திமுக குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர். அதை கேட்டுக்கொண்ட கட்சியின் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், "தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்க தாமதம் ஏன்? என்று திமுக தலைமையிடம் நேரடியாக கேளுங்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
41 தொகுதிகள் என்பதை கேட்டுப்பெறுங்கள். எந்த வகையிலும் 35 தொகுதிகளுக்கு குறைந்துவிடக்கூடாது" என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு காங்கிரஸ் கட்சி இறங்கி வந்ததும், திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் வரும் 22-ந் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கும் என்று அறிவித்துவிட்டது.
தாராளம் காட்டிய தவெக
ஆட்சியில் பங்கு என்று அடம்பிடித்த காங்கிரஸ் திடீரென இறங்கிவர காரணம் என்ன? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே மாற்று வாய்ப்பாக இருந்த த.வெ.க., தனது கூட்டணி கதவை மூடிவிட்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
முதலில் காங்கிரஸ் கட்சியை தங்களுடைய கூட்டணிக்கு அழைத்த த.வெ.க., 70 தொகுதிகள், ஒரு துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவிகளை தருவதாக தாராளம் காட்டியது. காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. கோரிக்கையை திமுக ஏற்க மறுத்தால் தவெகவுடன் கூட்டணி அமைக்கவும் திட்டம் வகுத்தது.
கூட்டணி கதவு மூடல்
ஆனால், தவெக தலைமைக்கு மத்தியில் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து உத்தரவு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவாம். ஏற்கனவே, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளிவர முடியாத நிலை, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தது தொடர்பாக கிடுக்கிப்படி சி.பி.ஐ. விசாரணை என்று இடியாப்ப சிக்கலில் தவித்து வரும் தவெக தலைமையால், மேலிட உத்தரவை தட்ட முடியவில்லையாம். அதனால், கணத்த இதயத்துடன் அதை ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி கதவை அடைத்துவிட்டதாம்.
மீண்டும் 'கை' கொடுக்கும் நிலை
தவெகவின் இந்த திடீர் முடிவால் நிலைகுலைந்து போன காங்கிரஸ் கட்சியும் வேறு வழியில்லாமல் திமுகவிடம் இறங்கி வந்து மீண்டும் 'கை' கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாம்.