தேமுதிகவுடன் திமுக நாளை தொகுதிப் பங்கீடு பேச்சு?

விசிகவுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
தேமுதிகவுடன் திமுக நாளை தொகுதிப் பங்கீடு பேச்சு?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு குறைந்த நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முற்றுப் பெறவில்லை.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5, ம.தி.மு.க.வுக்கு 4, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதுவரையில் கூட்டணி கட்சிக்கு 48 இடங்களை தி.மு.க. வழங்கியுள்ளது. தே.மு.தி.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே தே.மு.தி.க.வை போன்று தங்களுக்கும் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக்குள் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்த நிலையில், தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நாளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக 5 பேர் கொண்ட குழுவை தேமுதிக நாளை அமைக்கிறது.

தேமுதிக அவை தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற உள்ளதாகவும் பேச்சுவார்த்தை நாளை தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கூட்டணி வெற்றிகரமாக செல்ல மற்றவர்கள் தொகுதியை விட்டுக் கொடுக்கும்போது நாங்களும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில், நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

விசிகவுடன் திமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com