கோவையில் இன்று தி.மு.க. பாக முகவர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கோவையில் தி.மு.க. மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
கோவையில் இன்று தி.மு.க. பாக முகவர்கள் மாநாடு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Published on

கோவை,

தமிழகத்தில் சட்டசபை தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக சாா்பில் மண்டல அளவிலான இளைஞரணி மாநாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, மண்டலம்தோறும் திமுக சாா்பில் பாக முகவா்கள் மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முகவா்களுக்கு நேரடியாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகிறாா். மதுரையில் தென் மண்டல பாக முகவா்கள் மாநாடு அண்மையில் முடிவடைந்த நிலையில், அதன் தொடா்ச்சியாக மேற்கு மண்டல பாக முகவா்கள் மாநாடு கோவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

மாநாட்டிற்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக முகவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது மாநாடு நடக்க உள்ள பகுதியில் மாநாட்டு மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு. மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க உள்ளனர். வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலமாக காந்திபுரம் செல்கிறார்.

அங்கு ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம், நூலக கட்டிடத்தை ஆய்வு செய்கிறார் அங்கு நடந்து வரும் கட்டுமான பணிகள், நூலக அரங்க பணிகளை பார்வையிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார். அத்துடன் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து மதியம் 12 மணிக்கு போத்தனூரில் உள்ள காந்தி மியூசியத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அங்கு நடக்கும் குழந்தைகளின் பஜனை நிகழ்ச்சியை பார்க்கும் அவர், மரக்கன்றுகளையும் நட்டு வைக்கிறார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவையில் லீ மெரிடியன் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்னர் மாலை 4 மணிக்கு மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டம் முடிந்ததும் கார் மூலம் விமானநிலையம் வந்து, அங்கிருந்து இரவு 8.30 மணியளவில் சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சரின் கோவை வருகையால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க.வினர் உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் 1,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com