

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. இதனை அடுத்து. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவில் புதிய எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை புதுச்சேரி அழைத்து சென்று அங்கு தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதாவது அ.தி.மு.க.வில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை, த.வெ.க. பக்கம் இழுக்க அந்த கட்சியில் இணைந்த மூத்த நிர்வாகி ஒருவர் கடும் முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த முயற்சியை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.