

திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், வழக்கமான வாக்குறுதிகள், அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அவர் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தாது.
த.வெ.க. தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக் கொடுப்பதையோ பேசுகிறார். தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே அவர் பேசுகிறார். தி.மு.க. எதிர்ப்பு என்றாலும் மாற்றுக்கருத்து இல்லை, செயல் திட்டம் என்ன? யாருக்காக கட்சி தொடங்கினார்? என்றும், எந்த இடத்தை நோக்கி அவர் பயணிக்கிறார்? எனவும் தெரியவில்லை. இதனை அரசியல் களத்தில் இருக்கிற என்னைப் போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறதா? என கேட்கிறீர்கள். ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியைப் பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது. ஆனால் எங்களது கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.