

கோவை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 9-ந் தேதி வேட்புமனுவை வாபஸ் செய்ய கடைசி நாள் ஆகும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அரசியல் கட்சியினர் தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. இனி வேட்பாளர்கள் மட்டும்தான் அறிவிக்க வேண்டும். அதுபோன்று தி.மு.க. கூட்டணியிலும் விரைவில் தொகுதி அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் அரசியல் கட்சியினர் மகிழ்ச்சியில் தங்கள் வேலையை தொடங்கி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி வர்ணம் பொறித்த பொருட்கள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
டவுன்ஹாலில் உள்ள கடைகளில் கட்சி வர்ணம் பொறித்த கொடிகள், பேட்ஜ்கள், குடைகள், டி-சர்ட், விசிறிகள், துண்டுகள் மற்றும் இரவிலும் பிரசாரம் செய்யும் வகையில் கட்சி சின்னங்கள் அடங்கிய ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள்.
இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது:-
தற்போது தேர்தல் வேலை சூடுபிடித்து உள்ளது. விரைவில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தங்களின் கட்சி சின்னம் பொறித்த பொருட்களை வாங்க அதிகளவில் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். அதை நாங்கள் தயாரித்து வைத்து உள்ளோம்.
குறிப்பாக தற்போது வெயில் அதிகரித்து வருவதால் அரசியல் கட்சியினர் தங்களின் சின்னம் மற்றும் கட்சியின் வர்ணம் பொறித்த குடைகள் அதிகமாக ஆர்டர் செய்து உள்ளனர். இதுதவிர துண்டு, பேட்ஜ்கள், தொப்பி, சட்டைகள், சேலை, டி.சர்ட்டுகள், கிரீடம் ஆகியவற்றை தயார் செய்து வைத்து உள்ளோம். இதுதவிர இரவிலும் பிரசாரம் செய்ய வசதியாக கட்சி சின்னம் பொறித்த ஒளிரும் மின்விளக்குகளும் உள்ளன. தற்போது அதன் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.