தே.ஜ. கூட்டணியில் இணைந்த கைகள்: எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன் சந்திப்பார்களா...?


தே.ஜ. கூட்டணியில் இணைந்த கைகள்: எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன் சந்திப்பார்களா...?
x

மத்திய மந்திரி பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரமும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், இன்றைக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, மத்திய மந்திரியும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குவது அ.தி.மு.க.தான். முதல்-அமைச்சர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணையாமல், மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இணைந்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று கூறிவந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றே கடுமையாக விமர்சித்தார்.

அதன்பிறகு, பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதனால், அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அவர் இணைந்திருக்கிறார்.

உடனே, அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை அழைத்து அவசர ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டி.டி.வி.தினகரனை வரவேற்றுள்ளார். பதிலுக்கு டி.டி.வி.தினகரனும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியலில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் இப்படி ஒரே நாளில் நட்பு பாராட்டும் அளவுக்கு மாறியிருப்பது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதையே காட்டுகிறது. இனி, எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் சந்தித்து பேசுவார்களா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நெடுநாள் பகையும் முடிவுக்கு வருமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தேர்தல் சமயத்தில் ஏற்படும் கூட்டணி மட்டும்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் மத்திய மந்திரி பியூஷ் கோயலை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை டி.டி.வி.தினகரனுடன் பா.ஜ.க.வே நடத்திக்கொள்ளட்டும் என்றும், தங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளில் இருந்து டி.டி.வி.தினகரனுக்கான இடங்களை வழங்கிக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

1 More update

Next Story