

சென்னை,
பா.ஜனதா சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வழங்கப்பட்டுள்ளது.
இதில் அர்விந்த் மேனன், சுதாகர் ரெட்டி, ஆகியோருக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளும், மத்திய மந்திரி எல்.முருகனுக்கு 5 தொகுதிகளும், பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில், தந்தையின் உடல்நிலையை சுட்டிக்காட்டி அண்ணாமலை இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பா.ஜனதா பொறுப்பாளர்கள் பட்டியலை, கட்சியின் மேலிடம் திரும்ப பெற்றுவிட்டதாகவும், அண்ணாமலைக்கு ஒதுக்கிய 6 தொகுதிகளில் 2 தொகுதிகள் பா.ஜனதாவின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனிடம் வழங்கப்பட்டதாகவும், அவரும் அதனை பார்க்க முடியாது என தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அப்படி எதுவும் இல்லை என பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.