அண்ணன் கமல்ஹாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்: திருமாவளவன்

அண்ணன் கமல்ஹாசனுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்: திருமாவளவன்

கமல்ஹாசனின் தொலைநோக்கு பார்வை அரசியல் புரிதலின் வெளிப்பாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது மக்கள் நீதி மய்யத்துக்கும் தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று கமல்ஹாசனின் பரபரப்பு அறிக்கை வெளியானது.

அதே நேரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் நீதி மய் யத்தின் ஆதரவு தொடரும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தார். நாங்கள் செய்தது தியாகம் இல்லை; கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசனின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.

நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.

அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com