என் உயரம் எனக்கு தெரியும்: கருணாநிதி பாணியில் பதில் அளித்த மு.க. ஸ்டாலின்

நிச்சயமாக பலமுனைப் போட்டிகள் இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை என்று ஸ்டாலின் கூறினார்.
 என் உயரம் எனக்கு தெரியும்: கருணாநிதி பாணியில் பதில் அளித்த மு.க. ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: இந்த தேர்தல் திராவிட மாடல் - வட இந்திய மாடல் என்று சொன்னீர்கள். அதைப்பற்றி சொல்லுங்கள்?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: என்னுடைய பேச்சில் நான் தெளிவாக சொல்லியிருக்கிறேன். மதச்சார்பின்மை, சோசியலிசம், பாசிசத்தை எதிர்க்க வேண்டும். இதுதான் திராவிட மாடல். எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களுடைய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

கே: பா.ஜ.க. அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்கள். அவர்களுடைய கூட்டணியும் திராவிட மாடலைத்தான் பின்பற்றுவதாக சொல்கிறார்கள்.

ப: நிச்சயமாக இல்லை. உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். அதைப் பயன்படுத்திக் கொண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கே: இப்போது பலமுனைப் போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் பலமுனைப் போட்டியாகப் பார்க்கிறீர்களா? அப்படி வந்தால் அதில் உங்களுக்கு சாதகமா? பாதகமா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: நிச்சயமாக பலமுனைப் போட்டிகள் இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை.

கே: பிரதமர் 3 முறை இந்த மாதம் வரப் போகிறார்கள். பா.ஜ.க. தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அந்த கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: நான் அடிக்கடி சொல்கிறேன். பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித் ஷாவும் அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.

கே: தற்போது 5 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று தி.மு.க.வில் அனைவரும் சொல்கிறார்கள். மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக இருக்கிறது. அது உங்கள் கடமையாக நினைக்கிறீர்களா? அல்லது இந்த தேர்தலுக்கான ஒரு ‘கேம் சேஞ்சர்’ ஆக உள்ளதா?

ப: இதற்கு தொடக்கத்திலேயே விளக்கம் கொடுத்தேன். அதை என்றைக்குத் தொடங்கினோமோ அன்று காலையிலேயே தொலைக்காட்சியில் நான் பேசியிருக்கிறேன். அதுதான் விளக்கம். இதற்கு மேல் விளக்கம் சொல்ல அவசியம் இல்லை. தொடர்ந்து நாங்கள் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கே: இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் சொல்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நீங்கள் ஏற்பீர்களா?

ப: தலைவர் கலைஞர் ஒருமுறை ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com