த.வெ.க. கூட்டணிக்கு செல்கிறதா காங்கிரஸ்..? - நாஞ்சில் சம்பத் வைத்த 'டுவிஸ்ட்'

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டால், அவர்களுக்கு ஒரே சாய்ஸ் த.வெ.க.தான்.
த.வெ.க. கூட்டணிக்கு செல்கிறதா காங்கிரஸ்..? - நாஞ்சில் சம்பத் வைத்த 'டுவிஸ்ட்'
Published on

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தினமும் தி.மு.க.வை சீண்டும் வகையில், தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இதனால், கடுப்பான தி.மு.க. தலைமை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க கோரியது.

அவரும், கட்சி தலைமையிடம் போய் புகார் அளித்தார். 2 நாட்கள் ஆன நிலையில், இதுவரை மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் அடங்க மறுத்து தொடர்ந்து கருத்துகளை அத்துமீறி கூறிவருகிறார்.

இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்திக்கு உள்ளான தி.மு.க., வரும் 22-ந் தேதி தொடங்கும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை அழைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைந்துவிட்டதால், அது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்பட்டால், அவர்களுக்கு ஒரே சாய்ஸ் த.வெ.க.தான்.

த.வெ.க. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது. 70 தொகுதிகள், ஒரு துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவிகள், உள்ளாட்சியிலும் கணிசமான இடங்கள் தருவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சினை, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை என்று விஜய் சிக்கி தவித்ததால், மத்திய அரசு மீதான விமர்சனத்தையும் குறைத்துக்கொண்டார்.

இந்த நேரத்தில், தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க கூடாது என்று மத்தியில் ஆளும் தரப்பில் இருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை விஜய் பொருட்படுத்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிப்பது ஆட்டம் கண்டுள்ளதால், அந்தக் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பேசிய த.வெ.க. பிரசார செயலாளர் நாஞ்சில் சம்பத், த.வெ.க. கூட்டணிக்கு தேசிய கட்சி ஒன்றும், சில மாநில கட்சிகள் வருவதாகவும் கூறியுள்ளார்.

அதனால், காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க. மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. விரைவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com