

சென்னை,
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.
தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால் மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நடைமுறை உள்ளது. அந்த வகையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) ஜனவரி 10-ந் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
கடந்த ஆண்டு கடல் மாநாடு, மாடு மாநாடு, மலை மாநாடு, தண்ணீர் மாநாடு என்று அடுத்தடுத்து நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், திருச்சியில் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
வழக்கமாக, நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கும் முக்கியத்தும் கொடுக்கும் வகையில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், வரும் தேர்தலிலும் 117 தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட இருக்கின்றன. மேலும், இந்த முறை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில், சீமான் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கைமாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மிகவும் பிரபலமான தொகுதியாகும். இந்த தொகுதியானது கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, வணிகம் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய அம்சங்களை ஒருங்கே கொண்ட முக்கிய தொகுதியாக கருதப்படுகிறது. கடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் காணப்பட்டது. ஆனால், சமீப காலமாக மாற்று அரசியல் குறித்த விவாதங்கள் இங்கு அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீமான் 2016-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் மட்டும் போட்டியிட்டு வருகிறார். முதல் தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2-வது தேர்தலில் (2021) திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். திருவொற்றியூர் தொகுதியில் 3-வது இடம்பிடித்த அவர், 24.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.