காங்கிரசுக்கான தொகுதிகள் ப.சிதம்பரம் தலைமையில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறாமல் இழுபறியுடன் முடிவடைந்துள்ளது.
காங்கிரசுக்கான தொகுதிகள் ப.சிதம்பரம் தலைமையில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசியலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்பது நீண்டநாள் கூட்டணியாக மட்டுமல்லாமல், அது ஒரு கொள்கை சார்ந்த கூட்ட ணியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் காங்கிரசார் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் இந்த தேர்தலில் பலமாக ஒலிக்க தொடங்கியது.

த.வெ.க. எனும் புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தார். இதனால், ஆட்சியில் பங்கு என கோஷம் எழுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.

அதேவேளையில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியில் இன்னொரு தரப்பினர் உறுதியாக இருந்தனர். இதற்கிடையில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மேலிடம், '39 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கூட குறையக்கூடாது. கேட்டது கிடைத்தால் கூட்டணியில் தொடருவோம்' என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 2 ராஜ்யசபா சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு- உள்ளாட்சியில் பங்கு போன்றவற்றிலும் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க. தரப்பில், இதற்கு மேல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறாமல் இழுபறியுடன் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ப.சிதம்பரத்திடம் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசியுள்ளார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் ப.சிதம்பரம் தலைமையில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப.சிதம்பரம் தலைமையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இல்லாமல் இறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக 27 தொகுதிகள் வரை தர விரும்பும் நிலையில் 28 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா இடம் என பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com