

சென்னை,
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது" என பேசியிருந்தார். அதே சமயம், காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து தொடர்பாக மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி, தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.
கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியடைந்தன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்புதான் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.