தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாளை அவசர கூட்டம்

தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாளை அவசர கூட்டம்

தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது.
Published on

சென்னை,

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., இந்த முறை (2026) 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும், தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுவந்தன.

ஆனால், கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், கூடுதல் தொகுதிகள் தரமுடியாது, மாறாக இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தலைமை கூறியதால், கூட்டணி கட்சிகள் அதிர்ந்து போயின. என்றாலும், காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி, கடந்த முறையைவிட 3 தொகுதிகள் கூடுதலாக, அதாவது 28 இடங்களை பெற்றுக்கொண்டது.

இதேபோல், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடினாலும், ம.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள் குறைவாகவும் (4), இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 1 தொகுதி குறைவாகவும் (5) ஒதுக்கப்பட்டது. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூடுதல் தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியில் போராடி வருகின்றன.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அவசர மாநில செயற்குழு & மாநிலக்குழு கூட்டம் நாளை (மார்ச் 21) காலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் தொகுதிப்பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா?, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா? என்று விவாதிக்கப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com