தவெக பக்கம் திரும்பும் சிறுபான்மையினர், இளைஞர்கள் வாக்கு: வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் திமுக புது வியூகம்

ஒவ்வொரு முன்னெடுப்பையும் கண்ணும் கருத்துமாக திமுக எடுத்துவைத்து வருகிறது.
தவெக பக்கம் திரும்பும் சிறுபான்மையினர், இளைஞர்கள் வாக்கு: வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் திமுக புது வியூகம்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, வரும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறது. இந்த தேர்தலில் புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வொரு முன்னெடுப்பையும் கண்ணும் கருத்துமாக திமுக எடுத்துவைத்து வருகிறது.

அதனாலதான், முன் எப்போதும் இல்லாத வகையில், திமுகவுக்கு இந்த முறை பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (பென்), ரிஷி ராஜ்சிங்கின் ஐபேக், ராபின் சர்மாவின் சோ டைம் கன்சல்டிங் ஆகிய 3 நிறுவனங்கள் தேர்தல் வேலைகளை கவனித்து வருகின்றன.

திமுக நிர்வாகிகள் அச்சம்

இதுதவிர, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சுனில் கனுலோலு தலைமையில் ஒரு குழு தனியாக தேர்தல் பணிகளை செய்து வருகிறதாம். இந்த 4 நிறுவனங்கள் தான் திமுக தலைமைக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுப்பதுடன், வேட்பாளர்கள் தேர்வையும் கவனித்து வருகிறதாம். இது திமுக நிர்வாகிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் பணியாற்றும் தமிழக கேடரை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், உளவுத்துறை தகவல்கள் மற்றும் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக, தான் மேற்கொண்ட ஆய்வுடன் திமுக தலைமையை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

விரிவான அறிக்கை

அப்போது, தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து விரிவான அறிக்கையை அந்த ஐ.பி.எஸ். அதிகாரி கட்சி தலைமையிடம் வழங்கியதாக தெரிகிறது. அறிக்கையை பார்த்தவுடன் திமுக தலைமை அதிர்ச்சியடைந்ததாம். ஏற்கனவே, "சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றிபெறும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால், இந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் கணிப்பில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், திமுகவுக்கு 200 தொகுதிகளில் வெற்றி என்பது எளிதல்ல என்று தெரியவந்துள்ளதாம்.

சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கிறிஸ்தவர் என்பதால் இந்த முறை சிறுபான்மையினர் வாக்கு அவருக்கு கிடைக்க சாதகமான சூழல் நிலவுகிறதாம். இப்போதே, பல கிறிஸ்தவ தேவாலயங்களில் அவருக்கு வாக்களிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதாம்.

மேலும், இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் கணிசமான வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் நிலையும் உள்ளதாம். பொதுவாக, சிறுபான்மையினர் வாக்கு சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு வழக்கமாக கிடைக்கும். அதுதான் பல தொகுதிகளில் திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

கொங்கு மண்டலம் திமுகவுக்கு சாதகம்

ஆனால், இந்த முறை சிறுபான்மையினர் வாக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கிடைக்கும் என்பதால், அது திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், திமுகவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், இந்த முறை கொங்கு மண்டலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை திமுகவுக்கு சாதகமாக இருக்கிறதாம்.

எப்போதும், அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில், இந்த முறை அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளதாம். அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறதாம்.

மீண்டும் வெற்றிக் கனி கிடைக்குமா?

இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒட்டுமொத்த முடிவு எப்படி இருக்கப்போகிறது? என்பது திமுகவுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாம். அதனால்தான், மகளிர் உரிமைத்தொகை பெறும் 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டதாம். தற்போதைய நிலையில், மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து திமுகவிடம் உள்ள 3 வியூக வகுப்பு நிறுவனங்களும் ஆய்வு செய்து வருகின்றனவாம்.

மேலும், தமிழகத்தில் தவெகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் எவை? என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறதாம். அங்கு புது வியூகத்துடன் கூடுதல் கவனம் செலுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். எப்படியும் வரும் தேர்தலில் மீண்டும் வெற்றிக் கனியை பறித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக தீவிரமாக களப்பணி ஆற்றிவருகிறதாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com