

சென்னை,
தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர். இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனால், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளாரோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான அய்யப்பன் சட்டசபையில் பேசினார். அவர் பேசும்போது, "சத்துணவுத் திட்டத்தை எவ்வாறு இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்ச் சமூகம் உள்ளவரை பாராட்டிக்கொண்டே இருக்கும்.
வருகின்ற சட்டசபை தேர்தல் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக நமது மாண்புமிகு தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியுடனும், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆசியுடனும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
அவருடைய இந்த பேச்சை சற்றும் எதிர்பாராத திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இருக்கையில் அமர்ந்தபடி புன்னகைத்தார். ஆனால், இன்றைய கூட்டத்தை அதிமுக, பாமக (அன்புமணி அணி), பாஜக ஆகியோர் புறக்கணித்ததால், எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசிய நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.