திருச்சியில் இன்று தே.ஜ. கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்: தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்பாரா பிரதமர் மோடி?

திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் இன்று தே.ஜ. கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்: தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்பாரா பிரதமர் மோடி?
Published on

திருச்சி,

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் மதுராந்தகத்திலும், 2-வதாக புதுச்சேரி மற்றும் மதுரையிலும் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிலையில் 3-வது முறையாக பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தி.மு.க.வுக்கு பதிலடி கொடுப்பாரா?

இந்த பொதுக்கூட்டத்துக்கு பஞ்சப்பூரில் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அமர 76 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மேலும் இதில் 7 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தை சேர்ந்த 12 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் காவிக்கு இடமில்லை என கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இவற்றுக்கெல்லாம் பிரதமர் மோடி இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது கொடுத்த பல வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைப் திருச்சி மேடையில் பிரதமர் ஆயுதமாக எடுப்பார் என்றும் தெரிகிறது. மேலும், இந்த மாநாட்டில் திமுக-வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறி ஆக்கும் வகையில் மோடி தனது பேச்சுக்களை அம்புகளாக எய்வார் என்றும் தெரிகிறது.

மேலும் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக அதே பகுதியில் மத்திய அரசின் விழா நடைபெறுகிறது. இதில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்.

இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் பங்கேற்கிறேன். தமிழகம் முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை பார்த்து, தி.மு.க., பதற்றம் அடைந்துள்ளது.

தி.மு.க.,வின் தவறான நிர்வாகமும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து, தமிழக மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால்தான் நம்பிக்கையும், முன்னேற்றமும் உடைய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்களுடன் மக்கள் அதிகமாக இணைந்து வருகின்றனர் ” என்று பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com