

ட்
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டும் தருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பயணித்தோம். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடம் மற்றும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால் தி.மு.க. அந்த கோரிக்கைகளை சிறிதளவும் பொருட்படுத்தவில்லை. தி.மு.க. அரசில் குறிப்பிட்ட அதிகாரிகளின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
அந்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு, தமிழக வாழ்வுரிமை கட்சியை தி.மு.க. புறக்கணித்திருக்கிறது. இந்தநிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளில் பத்தோடு, ஒன்றாக நான் இல்லை. நீங்கள் ஒரு சிறிய கட்சி எங்களை பார்த்து என்ன 'டிமாண்ட்' வைப்பது என பெரியண்ணன் பாணியில் எங்களை பார்த்து அவர்கள் பேசுகின்றனர். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் யார் டிமாண்ட் வைப்பதற்கு என்ற தொனியில் தி.மு.க.வினர் பேசினார்கள். எனவே கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளோம்.
வேல்முருகன் தி.மு.க.வுக்கு பெரிய குடைச்சல் என தி.மு.க. நிர்வாகிகள் பகிரங்கமாக பேசி உள்ளனர். தமிழ் சமூகத்திற்காக வைத்த கோரிக்கையை தி.மு.க. நிறைவேற்ற வில்லை. எங்களை கூடவே வைத்துக் கொண்டு வலுவான மாற்று அணியாக வரக்கூடாது என்று கடைசி நேரத்தில் இப்படி செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சியில் எந்த அமைச்சர்கள், எந்த துறை செயலாளர்கள் அவர்களது துறையில் எவ்வளவு தவறுகள் செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கிற பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி, நான் வைத்திருக்கிற 10 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிற அமைப்பு, அரசியல் கட்சிகளோடு கலந்துபேசி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வதை குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். தனித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லமாட்டோம். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் நாங்கள் முடிவெடுத்து அறிவிக்கின்ற கூட்டணியை தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும். எங்களுக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து தனித்து போட்டியா என்பது குறித்து அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நான் பண்ருட்டி தொகுதியில் நிற்கப் போவதில்லை என்று ஏற்கெனவே நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தேன். பண்ருட்டி மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இந்த முறை போட்டியிடப்போவதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன். ஒருவேளை மீண்டும் நமக்கு பண்ருட்டி தொகுதியில் இடம் கொடுத்தால் கூட கட்சியினுடைய முன்னணி தலைவர்களை நான் நிறுத்துகிறேன். அல்லது வேறு தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் அவர்களை நிறுத்துகிறேன். நான் தமிழ்நாடு முழுவதும் பயணித்து கட்சிப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். இதற்காக நீங்கள் அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.