வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப்பிழை இருந்தாலும் பொருட்படுத்த தேவையில்லை: தேர்தல் கமிஷன் தகவல்

100 சதவீத வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப்பிழை இருந்தாலும் பொருட்படுத்த தேவையில்லை: தேர்தல் கமிஷன் தகவல்
Published on

சென்னை,

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வாக்காளர்கள் தங்களின் உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை தடுப்பதற்காக, வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு வழி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காட்டுவதுதான்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காட்ட முடியாமல் போய்விட்டால், அவர்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படக்கூடும். எனவே அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, பட்டியலில் பதிவு செய்யப்பட்ட 100 சதவீத வாக்காளர்களுக்கும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட வரும்போது வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண் டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனாலும் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை காட்டுவதற்காக ஆதார் உள்பட 12 அடையாள அட்டைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையால் வாக்காளரின் அடையாளம் மெய்ப்பிக்கப்படுகிறபோது, அதிலுள்ள அச்சுப்பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்த தேவையில்லை. மற்றொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஓட்டுப் போடுவதற்காக வாக்குச்சாவடியில் கொடுக்கலாம்.

ஆனால் அந்த வாக்காளர் வாக்களிப்பதற்காக வந்துள்ள வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போது அவரது வாக்காளர் அடையாள அட்டை ஏற்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். புகைப்படம் பொருந்தாததால் வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிக்க இயலாமல் போனால், 12 மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com