விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை பேச வேண்டிய அவசியமில்லை: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை பேச வேண்டிய அவசியமில்லை: கார்த்தி சிதம்பரம்
Published on

சிவகங்கை,

சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதால் பொருளாதாரம் தானாகவே வளரும். ஆனால் வளர்ச்சி என்பது சமமாக இல்லை. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே வளர்ச்சி உள்ளது. கிராமத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பெரிய வளர்ச்சி இல்லை.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி 2004-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, சோனியா காந்தியால் உருவாக்கப்பட்டது. பல தேர்தல்களை ஒன்றாக சந்தித்து பல வெற்றிகளை பெற்ற கூட்டணி. புதிய கட்சிகள் கூட்டணிக்காக வந்துள்ள நிலையில் அவற்றை மனதில் வைத்து உடன்பாடு எட்டப்படும்.

மதுரை வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோவில் மட்டுமல்ல முருகனின் ஆறுபடை வீட்டிற்கும் செல்ல வேண்டும். பிரதமர் அறிவிப்பது அனைத்தும் அறிவிப்பாகவே உள்ளது. அமல்படுத்தப்படுவது இல்லை. ஏற்கனவே தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல முறை வந்துள்ளார். இருப்பினும் பா.ஜனதா தோல்வியையே சந்தித்தது. இந்த முறையும் அது தொடரும்.

இந்தியா கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்துகொண்டே உள்ளன. ஒரே கூட்டணியில், ஒரே கட்சியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. விஜய்யின் தனிப்பட்ட விஷயங்களை அரசியலில் பேச வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com