கடன் உயர்வு பற்றி கவலை இல்லை: அரசியல் கட்சிகளின் கவர்ச்சி அறிவிப்புகள் வாக்காளர்களை கவருமா?

மொத்த வருவாயில் பெரும்பகுதி பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகின்றன. வட்டிக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.
சென்னை,
நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என எதுக்கு தேர்தல் நடந்தாலும் கதாநாயகனாக திகழ்வது, அந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தான். எப்படி, வலுவான கூட்டணி அமைப்பது அரசியல் கட்சிகளுக்கு ஒருபுறம் வெற்றியை கொடுக்குமோ, அதேபோல் தேர்தல் அறிக்கை மூலம் கொடுக்கும் வாக்குறுதிகளும் மற்றொரு புறம் வெற்றியை எளிதாக்கும்.
கவர்ச்சி அறிவிப்புகள்
ஆரம்பத்தில், புதிய திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அரசியல் கட்சிகள் கொடுத்து வாக்கு கேட்ட காலம்போய், இப்போது கவர்ச்சி அறிவிப்புகளை சொல்லியே வாக்குகளை எளிதாக பெறும் காலம் வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2006-ம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் என்று அறிவித்தது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெற இந்த கவர்ச்சி அறிவிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி
அதன்பிறகு, 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஒருபடி மேலே போய், தனது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவோம் என்றும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலி செய்ய 8 கிராம் தங்கம் வழங்குவோம் என்றும் அறிவித்தது. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்தலில் அதிமுக பெற்ற தொடர் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகள் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், செல்போன் வாக்குறுதி ஆட்சி முடியும் வரை நிறைவேற்றப்படவில்லை.
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது, மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் ஆகியவை ஆகும். இப்போது, தேர்தல் நெருங்கி வருவதால், மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, குலவிளக்கு என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தனது கட்சியின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடன் அளவு உயர்வு
இப்படி, ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தே தேர்தலில் வெற்றி பெற்று வந்திருப்பதை காண முடிகிறது. ஆனால், இந்த கவர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.அதனால்தான், தமிழகத்தில் எப்போதெல்லாம் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோ, அப்போதெல்லாம் மாநிலத்தின் கடன் அளவும் அபரிமிதமாக உயர்ந்து வந்துள்ளதை காணமுடிகிறது.
ஒருவர் தலையில் ரூ.1.94 லட்சம் கடன்
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.9.29 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் தலா ரூ.1.94 லட்சம் கடன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 2011-2016 ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சத்து 1 ஆயிரத்து 345 கோடியாக இருந்த கடன் அளவு, 2016-2021-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த காலத்தில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடியாக அதிகரித்தது.
ரூ.10 லட்சம் கோடியை எட்டும்
தொடர்ந்து, 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தற்போது வரை கடன் அளவு ரூ.9 லட்சத்து 21 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இப்படி, கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போனால், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு வருவாய் என்று பார்த்தால், வணிக வரிகள் மூலம் சுமார் 75 சதவீதமும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் 12 சதவீதமும், மாநில ஆயத்தீர்வையில் இருந்து 7 சதவீதமும், வாகனங்கள் மீதான வரிகளில் இருந்து 6 சதவீதமும், மற்ற வரிகள் வகையில் 2 சதவீதமும் கிடைக்கிறது.
கவர்ச்சி அறிவிப்புகள் தேவையா?
மொத்த வருவாயில் பெரும்பகுதி பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகின்றன. வட்டிக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது. இதுபோக, அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக சுமார் ரூ.85 ஆயிரம் கோடியும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்களுக்காக சுமார் ரூ.38 ஆயிரம் கோடியும், உதவித்தொகைகள், மானியங்கள் வகையில் சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியும், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடியும், மொத்த மூலதன செலவுகளுக்காக சுமார் ரூ.50 ஆயிரம் கோடியும் செலவு செய்யப்படுகிறது. இப்படி, வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கும்போது, தேர்தல் அரசியலுக்காக கவர்ச்சி அறிவிப்புகள் எல்லாம் தேவையா? என்பதுதான் நாட்டு நலன் மீது அக்கறை உள்ளவர்களின் கேள்வியாக இருக்கிறது.






