பரபரக்கும் அரசியல் களம்... திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்...!

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பரபரக்கும் அரசியல் களம்... திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்...!
Published on

சென்னை,

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஓபிஎஸ் உடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு-ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயம் வந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

3 முறை முதல்-அமைச்சர்

அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் தோல்வி அடைந்தார்.

தி.மு.க.வில் ஆதரவாளர்கள் ஐக்கியம்

அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். பா.ஜனதாவும் கண்டுகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் த.வெ.க.விலும் சேர்ந்துவிட்டனர்.

எனவே ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் ஐக்கியமாகினர். மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்துவிட்டார்.

இந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஓ.பன்னீசெல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com