போற போக்கை பார்த்தால்... அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டை விமர்சித்த பெ.சண்முகம்

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜவுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போற போக்கை பார்த்தால்... அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டை விமர்சித்த பெ.சண்முகம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க.-பா.ஜனதா அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா., அ.ம.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விரைவில் அ.தி.மு.க.-பா.ஜனதா தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.

இதற்கிடையே அ.தி.மு.க.விடம் கடந்த முறையைவிட இந்த முறை கூடு தல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டசபை தொகுதிகளில் கிட்டத்தட்ட 80 தொகுதிகளில் பா.ஜனதா 2-ம் இடம் பிடித்திருந்தது.

இந்த 80 இடங்களில் 72 தொகுதிகளை தேர்வு செய்து பா.ஜனதா பட்டியல் தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் இருந்து 35 தொகுதிகளை கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் தற்போது பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், பா.ஜனதாவுக்கு 35, அ.ம.மு.க.வுக்கு 6 என்ற அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை (வியாழக்கிழமை) தமிழகம் வர உள்ள பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் பியூஸ்கோயல் இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக-பாஜக குறித்த கார்ட்டூன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com