

சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகி வருகின்றன.
ஆளுங்கட்சியான திமுக, கடந்த தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பாமக (அன்புமணி அணி), டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.ஏ அருள் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. இதில் தேர்தல் கூட்டணி, அரசியல் களநிலவரம் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமதாஸ் தரப்பு பாமக இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.