தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி
Published on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், அந்த பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, சமீபத்தில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். இதற்காக வருகிற 4-ந் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய த.வெ.க. நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனுமதி கோரி கடந்த முன்தினம் தஞ்சை மத்திய மாவட்ட த.வெ.க. செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து த.வெ.க. நிர்வாகிகளுடன் இருமுறை போலீசார் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு தவெக கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தஞ்சை கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com