

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானது. முழுக்க.. முழுக்க.. கிராமங்களை உள்ளடக்கிய இந்த தொகுதியில் டவுன் பஞ்சாயத்து, நகராட்சி என எதுவும் கிடையாது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லையில் இந்த தொகுதி அமைந்துள்ளதால், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். குரும்பர், வன்னியர், கவுடா, ரெட்டி, தாழ்த்தப்பட்ட பிரிவினர், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். வேப்பனஹள்ளி தொகுதியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்தக் கட்சி ஆட்சிக்கு வராது என்ற வரலாற்று அதிசயம் நிகழ்ந்து வருகிறது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றி பெற்றார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார். ஆட்சி அதிகாரத்தில் அ.தி.மு.க. தொடர்ந்தது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.
இப்படி, வேப்பனஹள்ளி தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி ஆட்சிக்கு வரமுடியாது என்ற நம்பிக்கை அ.தி.மு.க. - தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் அந்த வரலாற்று அதிசயம் தொடருமா?, அல்லது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகிறது.