தவெகவுக்கு வரிசை கட்டி வரும் சிக்கல்கள்: தேர்தல் வியூக அலுவலகத்தை காலி செய்ய புது நெருக்கடி

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் குறித்த காலத்தில் வெளிவரவில்லை.
தவெகவுக்கு வரிசை கட்டி வரும் சிக்கல்கள்: தேர்தல் வியூக அலுவலகத்தை காலி செய்ய புது நெருக்கடி
Published on

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் குறித்த காலத்தில் வெளிவரவில்லை.

இதனால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. தற்போது, 'ஜனநாயகன்' திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எப்போது வெளியாகும் என்பதில் தொடர்ந்து 'சஸ்பென்ஸ்' நீடித்து வருகிறது.

வரிசை கட்டி நிற்கும் சிக்கல்

இது ஒரு பக்க பிரச்சினை என்றால், மற்றொரு பக்கம் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. முன்பு ஆஜராகி திரும்பிய நிலையில், இன்னும் அதற்கு முடிவு தெரியாமல் இருக்கிறது.

இப்படி த.வெ.க.வுக்கு சிக்கல் மேல் சிக்கல் என வரிசை கட்டி நிற்கும் நிலையில், இப்போது புது சிக்கல் ஒன்றும் வந்துள்ளது. அதாவது, சென்னை தேனாம்பேட்டையில் த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகமான ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் செயல்படும் கட்டடம் கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமனாரான 'லாட்டரி' மார்டினுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

அவகாசம் மறுப்பு

ஆதவ் அர்ஜுனா, தனது மாமனார் மார்ட்டினிடம் முறையாக அனுமதி பெற்றே இந்த அலுவலகத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், இப்போது அவர் திடீரென அலுவலகத்தை காலி செய்யுமாறு உத்தரவு போட்டுள்ளார். இதற்கு, மாநிலத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க. தரப்பில் இருந்து வந்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

'தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி திடீரென அலுவலகத்தை காலி செய்யச் சொன்னால் எங்கே போக முடியும்' என்று தேர்தல் வரை அதே இடத்தில் அலுவலகம் செயல்பட ஆதவ் அர்ஜூனாவும் அவகாசம் கேட்டாராம். ஆனால், அவகாசம் எல்லாம் தரமுடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டதாம். இதனால், த.வெ.க. தேர்தல் வியூக அலுவலகத்திற்கு புதிய இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com