கட்சியில் பொறுப்பு வழங்கக்கோரி நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம்

பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றால் மட்டுமே பா.ஜனதாவில் இணைந்தேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.
கட்சியில் பொறுப்பு வழங்கக்கோரி நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம்
Published on

சென்னை,

நடிகர் சரத்குமார் கடந்த 2024-ம் ஆண்டு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்தார். அப்போது, அவருக்கு பா.ஜனதாவில் தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொறுப்புகள் ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதற்கிடையே, பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

சரத்குமாருக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்கா தது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர்கள், 'மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் இல்லாததால் தேர்தல் களத்தில் செயல்படுவது சிரமமாக இருக்கிறது. உங்களுக்கு அங்கீகாரம் வழங்காவிட்டால் பா.ஜனதாவில் எங்களுக்கு வழங்கிய பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட தயாராக இருக்கிறோம்' என சரத்குமாரிடம் அவரது ஆதரவாளர் தெரிவித்தனர்.

இதனையடுத்து பா.ஜனதாவில் பொறுப்பு வழங்காமல் எப்படி செயல்பட முடியும் என்றும், அடுத்தக்கட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு முன்பு பொறுப்புகள் வருவது அவசியம் என்றும் பிரதமர் மோடியின் மீது கொண்ட பற்றால் மட்டுமே நான் பா.ஜனதாவில் இணைந்தேன் என்று பொறுப்பு இல்லாமல் எப்படி செயல்படுவது என்று எனக்கு தெரியவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாஜகவில் பொறுப்பு வழங்கக்கோரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம் வழங்கினார். அதன்பின்னர் சரத்குமார் கூறுகையில், “இன்றைய சந்திப்பு சுமூகமாக நடந்தது. மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்துள்ளார். எங்களின் கோரிக்கைகளை கடிதமாக கொடுத்துள்ளோம்; பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். நல்லதே நடக்கும்; நம்பிக்கை இருக்கு. பாஜகவின் முடிவை பொறுத்தே அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து முடிவெடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com