வாக்குகளை பிரிப்பது தான் விஜய்யின் வேலை; மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் பேச்சு

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகிய கட்சி ஒன்று, எனக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என கூறி தன்னந்தனியாக நிற்கிறது என்று சண்முகம் சாடினார்.
 
வாக்குகளை பிரிப்பது தான் விஜய்யின் வேலை;  மா.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
Published on

ஆயக்குடி,

தி.மு.க. கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆயக்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. என்னும் முகமுடியை அணிந்து பா.ஜனதா தன் பலத்தை அதிகரிக்கும திட்டத்துடன் செயல்படுகிறது. ஆனாலும் அவர்களால் காலூன்ற முடியவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. அங்கு ஏதாவது ஒரு கலவரத்தை நிகழ்த்துவார்கள். எனவே தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டுமா, என்பது இந்த தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை.

தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜனதா பாரபட்சம் காட்டுவார்கள். வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி தர மறுப்பதும், இங்கு நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்வார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜனதா பெயரை சொன்னால் ஓட்டு கிடைக்காது என்பது தெரியும். பிரதமர் மோடியின் பா.ஜனதா அரசு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 1500 கோடி ரூபாயும், தமிழ் மொழிக்கு ரூ.16 கோடியும் ஒதுக்கி ஒரு கண்ணில் வெண்ணை, மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதை போல் செயல்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகிய கட்சி ஒன்று, எனக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என கூறி தன்னந்தனியாக நிற்கிறது. சொல்லப்போனால் நடிகர் விஜய், கட்சி ஆரம்பித்த காலத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என ஆபர் கொடுத்தார். ஆனாலும் யாருமே அவருடன் கூட்டணிக்கு வரவில்லை. விஜய் வேலையெல்லாம் வாக்குகளை பிரிப்பது தான். அதை தவிர ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது. தமிழகத்தில் 2 அணிக்கு இடையில் தான் போட்டி. ஒன்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மற்றொன்று அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com