

சென்னை,
சென்னை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 1,005 நபர்களை முதற்கட்டமாக சட்டமன்றத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.